HomeTNC Talentsகுடைக்குள் மழ...

குடைக்குள் மழை

-

Article from 2023 Kalai Vizha Magazine

ஏப்ரல் 22, 2019. சான் பிரான்சிஸ்கோவில் காலை ஏழு மணி. பனி மூட்டம் அங்கிருந்த உயர்ந்த கட்டிடங்களுக்கு முக்காடிட்டிருந்தது. சூரியன் வெளியே வர இன்னும் சற்று நேரமாகும். இளங்கோ அரை குறையாக ரேடியோவைக் கேட்டபடி, வேலைக்குப் போவதற்காகத் தயாராகிக் கொண்டிருந்தான். நடந்தே போகக்கூடிய தூரத்தில்தான் அவன் வேலை செய்யும் மென்பொருள் நிறுவனம் இருந்தது.

ரேடியோவில் வந்த ஒரு செய்தி அவனைச் சற்று நிதானிக்க வைத்தது. இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு காலையில் (இலங்கை நேரப்படி ஏப்ரல் 21 காலை) சில தேவாலயங்களிலும் சில ஹோட்டல்களிலும் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்ததாகவும் பலர் இறந்தும் காயமடைந்தும் உள்ளதாக செய்தி வந்துகொண்டிருந்தது.

குண்டுத்தாக்குதலுக்கு உள்ளான இடங்களுள் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயமும் ஒன்று எனத் தெரிய வந்தது. அந்தத் தேவாலயம் இளங்கோவுக்குச் சற்றுப் பரிச்சயமானது. அது ஒரு கத்தோலிக்கத் தேவாலயமாக இருந்தாலும் அங்கு மற்ற மதத்தினரும் சென்று வழிபடுவதை அவன் கவனித்திருக்கிறான். கொழும்பில் வேலை செய்துகொண்டிருந்த காலத்தில் அவன்கூட ஓரிரு தடவைகள் அவனோடு வேலை செய்த  நண்பி ரெஜினாவோடு அங்கு சென்றிருக்கிறான். 

ரெஜினா, குடும்பத்தோடு ஈஸ்டர் தொழுகைக்காகக் கட்டாயம் அங்கே போயிருந்திருப்பாள் என்ற எண்ணம் இளங்கோவின் மனதை அலைக்கழித்தது. ஆனால் உடனே அவளை நேரடியாகத் தொடர்பு கொள்ளச் சற்றுத் தயக்கமாக இருந்தது. அவன் அவளைப் பற்றி நினைத்தபடியே வேலைக்குக் கிளம்பினான்.

இளங்கோ 2013 ஆம் ஆண்டு மொரட்டுவ பல்கலைக் கழகத்தில் கொம்பியூட்டர் சயன்சில் பட்டம் பெற்றபின் கொழும்பிலுள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தான். அங்குதான் அவன் ரேஜினாவை சந்ததித்தான். அவள் மனிதவளப் பிரிவில் வேலை செய்து கொண்டிருந்தாள். வேலையில் சேர்ந்த முதல் நாளே அவளைச் சந்தித்து சில formalities நிறைவேற்ற வேண்டி இருந்தது. அவள் ஒரு தமிழ்ப் பெண் என்பதால் உடனடியாகவே அவளோடு பரிச்சயம் ஏற்பட்டது. அதன் பின்னர் இருவருக்கும் இடையே நட்பு சிறிது சிறிதாக வளர்ந்தத

வேலை முடிந்ததும் இருவரும் அனேகமாக ஒன்றாகவே நடந்து பஸ் தரிப்பு வரையும் செல்வார்கள். இளங்கோ பஸ்ஸுக்காகக் காத்திருக்கும் போது, ரெஜினாவை அவளுடைய boyfriend மோட்டார் சைக்கிளில் வந்து ஏற்றிச் சென்று அவள் வீட்டில் இறக்கி விடுவான். அவளுடைய பெற்றோரின் அனுமதியுடன்தான் அவளும் boyfriendஉம் பழகிக் கொண்டிருந்தார்கள். ஓரிரு தடவைகள் office நிகழ்ச்சிகளில் அவள் தனது boyfriendஐ இளங்கோவிற்கு அறிமுகப்படுத்தி இருக்கிறாள். ஆனால் அவன் இளங்கோவோடு அவ்வளவு நட்போடு பழகவில்லை. 

ஒருநாள் பின்னேரம் இளங்கோவும் ரெஜினாவும் வேலை முடிந்து வெளியே செல்ல office வாசலுக்கு வந்தபோது, மழை கொட்டிக்கொண்டிருந்தது. இளங்கோ குடை கொண்டு வந்திருக்கவில்லை. ரெஜினா தனது குடையின் கீழ் வரும்படி கேட்டாள். அவனுக்குச் சற்று சங்கடமாக இருந்தது. அவன் தான் மழை விட்டபின் பஸ் தரிப்புக்குச் செல்வதாகச் சொன்னான். ஆனால் ரெஜினா விடுவதாக இல்லை. இருவரும் ஒரு சிறு குடையின் கீழ் ஒன்றாக பஸ் தரிப்பை நோக்கி நடந்தார்கள். பஸ் தரிப்பை அண்மித்ததும் அங்கே ரெஜினாவின் boyfriend அவளுக்காகக் காத்திருந்தான். ரெஜினா அவனது மோட்டார் சைக்கிளில் ஏறி வீட்டுக்குச் சென்றுவிட்டாள்.

அடுத்த நாள் கண்டபோது அவள் “இனி மழைக் காலங்களிலை குடை ஒண்டு கொண்டுவா” என்று ஒரு புன்னகையோடு சொன்னாள். ஏன் என்று இளங்கோ கேட்டபோது “நேற்று நீ என்னோடை குடைக்குக் கீழை வந்தது அவனுக்கு அவ்வளவு பிடிக்கேல்லை” என்றாள். ‘அது தானே நான் வரேல்லை எண்டு சொன்னனான்” என்றான் இளங்கோ. 

இது நடந்து சில மாதங்களின் பின்னர், September 2015 இல் இளங்கோ மேற்படிப்புக்காகக் கலிபோர்னியாவிற்குப் புறப்பட்டான். இங்கு வந்தபின் ரேஜினாவோடு அதிகம் தொடர்புகள் வைத்துக் கொள்ளவில்லை. ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தில் M. S. பட்டமும் பெற்று, சான் பிரான்சிஸ்கோவில் ஒரு வேலையும் தேடிக்கொண்டான். December 2018 இல், மூன்று வார விடுமுறையில் இலங்கைக்குப் புறப்பட்டான். 

கொழும்பில் வந்திறங்கி, யாழ்ப்பாணத்திலுள்ள தனது ஊருக்குச் செல்வதற்கு முன்னர், மூன்று நாட்கள் அங்கு நண்பர்களோடு தங்கியிருந்தான். ஒரு நாள், அவன் முன்னர் வேலை செய்த அலுவலகத்திற்குச் சென்றான். மற்ற நண்பர்களைச் சந்தித்த பின்னர் ரெஜினாவோடு சிறிது நேரம் கதைக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

ரெஜினா அவனைக் கண்டதும் “வா வா canteen இலை போய்க் கதைப்பம்” என்று கூட்டிச் சென்றாள்.

போகும் வழியில் “இப்ப கொஞ்சம் smart ஆ வந்திட்டாய்” என்றாள்.

“சும்மா பகிடி விடாதை” என்று இளங்கோ மகிழ்ச்சியை மறைத்தபடி சொன்னான்.

இருவரும் canteen இல் போய் அமர்ந்ததும் ரெஜினா இரண்டு tea க்கு ஆர்டர் கொடுத்தாள். “எப்பிடி இருக்கிறாய். மோதிரம் ஒண்டையும் காணெல்லை. என்னும் கலியாணம் செய்யேல்லையா? உன்ரை boyfriend எப்பிடி இருக்கிறான்” என்று ஒரே மூச்சில் பல கேள்விகளை அடுக்கினான் இளங்கோ. எப்போதும் மலர்ச்சியோடு இருக்கும் ரெஜினாவின் முகம் சற்று வாடிப் போனது.

“அவனும் நானும் பிரிஞ்சிட்டம்” என்றாள். 

“ஏன் என்ன நடந்தது?” என்று கவலையோடு கேட்டான் இளங்கோ.      

“உனக்கு அந்தக் குடைச் சம்பவம் நினவிருக்கா?” என்றாள்.

தூக்கி வாரிப் போட்டது இளங்கோவிற்கு. “அதுதான் காரணமா?” என்று கவலையோடு கேட்டான்.

“அது மட்டுமில்லை. அதைப் போல பல சம்பவங்கள். அவனுக்கு சரியான சந்தேகப் புத்தி. நான் வேறு எந்த ஆம்பிளையோடையும் பழகிறது அவனுக்குப் பிடிக்காது. இதெல்லாம் என்னாலை போறுக்க முடியேல்லை” என்றாள்.

“சரி சரி கவலைப் படாதை. உன்னைப் போல ஒரு வடிவான பெண்ணுக்கு கொழும்பிலை இன்னொரு boyfriend பிடிக்கிறது கஷ்டமா?” என்றான். 

அவள் முகத்தில் ஒரு குறுநகை மலர்ந்தது. “சரி சரி, உன்ரை plan” என்ன? என்றாள்.

“நான் யாழ்ப்பாணத்துக்குப் போறன். வீட்டிலை பாக்கிற பெம்பிளையளிலை ஆரையாவது பிடிச்சிருந்தால் கட்டுவம் எண்டு யோசிச்சன்”.

“உனக்கென்ன விசரா? இந்தக் காலத்திலை கொஞ்சமும் தெரியாத ஒரு பெண்ணைக் கட்டப் போறியா? நல்லாத் தெரிஞ்ச பெம்பிளையள் ஒருத்தரையும் உனக்குத் தெரியாதா? நல்லா யோசிச்சுப் பார்” என்றாள்.

“சரி சரி, இப்ப நான் போகவேணும். ஏலுமெண்டால் அமெரிக்காவுக்குத் திரும்பிப் போக முந்தி வந்து சந்திக்கிறன்” என்று சொல்லி அவன் விடை பெற்றான்.

“நல்லாத் தெரிஞ்ச பெம்பிளையள் ஒருத்தரையும் உனக்குத் தெரியாதா?” என்று அவள் கேட்டதன் அர்த்தம் என்ன? அவள் தன்னைப் பற்றித்தான் அப்படிச் சொல்கிறாளோ என்ற எண்ணம் இளங்கோவின் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.

இந்த சம்பவத்தின் பின்னர் அம்மா காட்டிய பெண்கள் எவரையும் அவனுக்குப் பிடிக்கவில்லை. ரெஜினாவைப் பற்றிய எண்ணங்கள் அவன் மனதை விட்டு விலகவில்லை. ஒரு திரைப் படத்தில் வந்த பாடலின் சில வரிகள் அவன் மனதில் வந்து கொண்டே இருந்தன.

“காதல் ஒன்றும் தவறே இல்லை

காதல் இன்றி மனிதனும் இல்லை                               

நண்பர்களும் காதலர் ஆக

மாறியபின் சொல்லிய உண்மை”

அவன் அமெரிக்கா திரும்பிச் செல்வதற்கு மூன்று நாட்களுக்குமுன் கொழும்புக்குத் திரும்பினான். ரேஜினாவைச் சந்திக்க விரும்புவதாகச் சொல்லி பம்பலபிட்டி Majestic city food court இல் அவளைச் சந்தித்தான். இருவரும் ஐஸ் கிரீம் சாப்பிட்டபடி பேசிக் கொண்டிருந்தார்கள்.

“அவசரமா ஏன் கூப்பிட்டநீ?” என்றாள் ரெஜினா.

“நீ அண்டைக்குச் சொன்னதை திரும்பத் திரும்ப யோசிச்சுப் பாத்தன். எனக்கு நல்லாத் தெரிஞ்ச ஆக்களிலை நீ ஒராள்தான் இன்னும் கலியாணம் கட்டாமல் இருக்கிறாய்” என்றான் இளங்கோ. அடுத்து என்ன வரப்போகிறது என்பது தெரிந்தது போல அவள் முகம் மலர்ந்தது.

“ஏன் நாங்கள் ரண்டு பேரும் கலியாணம் செய்துகொள்ளக் கூடாது?” என்று தொடர்ந்தான் இளங்கோ.

அவளின் மனதில் இப்போது மகிழ்ச்சியோடு ஒருவித கவலையும் சேர்ந்து கொண்டது.

“என்ரை அப்பாவும் அம்மாவும் எப்பிடியும் ஒரு கத்தோலிக்கரையே நான் கட்டவேணும் எண்டு முடிவா இருக்கினம். நீ மதம் மாறச் சம்மதிப்பியா?”

“உனக்குத் தெரியும் எனக்கு மதங்களிலை நம்பிக்கை இல்லை எண்டு. நீ ஒரு கத்தோலிக்கப் பெண்ணாகவே இரு. நான் நானாகவே இருக்கிறன். ஒரு பிரச்சினையும் வராது” என்றான்.

“அப்பா அம்மா இதுக்குச் சம்மதிப்பினமோ தெரியாது. எனக்கும் நீ மதம் மாறினால்தான் பிற்கால வாழ்க்கைக்கு நல்லது எண்டு தோன்றுது” என்றாள் ரெஜினா. 

“சரி அப்ப. நீ நல்லா யோசிச்சுப் பார். அப்பா அம்மாவோடையும் கதை. உங்கடை மனங்கள் மாறினால் என்னை டெலிபோனிலை கூப்பிடு” என்று சொல்லி சற்று ஏமாற்றத்தோடு விடை பெற்றான் இளங்கோ.

அவன் 2019 ஜனவரியின் முற்பகுதியில் சான் பிரான்சிஸ்கோ திரும்பினான். அதன் பின்னர் அவள் அவனோடு தொடர்பு கொள்ளவில்லை. இளங்கோ வேலையிலிருந்து திரும்பியதும் கொழும்பிலிருந்த ஒரு mutual friend ஐ டெலிபோன் இல் அழைத்தான். சிறிது நேரம் ஈஸ்டர் ஞாயிறு அன்று  நடந்த சம்பவங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். 

ரெஜினாவிற்கும் அவள் குடும்பத்திற்கு ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என்று அந்த நண்பன் சொன்னான். இளங்கோவின் மனதில் அமைதி ஏற்பட்டது.

அடுத்து ரெஜினாவை டெலிபோனில் அழைத்தான். இளங்கோவின் குரலைக் கேட்டதும் அவள் அழத் தொடங்கிவிட்டாள்.

“ஏன் அழுறாய்? உங்கள் ஒருத்தருக்கும் ஒண்டும் நடக்கேல்லைத் தானே.” என்றான் இளங்கோ.

“நானும் அப்பா அம்மாவும் ஒரு மயிரிழையிலைதான் தப்பிச்சம். பாவம் நிறைய அப்பாவியள் செத்துப் போச்சினம். மதங்களின்ரை பேரிலை நடக்கிற வன்முறையளைப் பாக்க எனக்குக் கவலையா இருக்கு” என்றாள்.

“ஓம் ஓம். அதை நான் எப்பவோ உணர்ந்திட்டன். அது சரி ஏன் நீ மூண்டு மாதமா என்னைக் கூப்பிடேல்லை? ஏதாவது முடிவு சொல்லுவாய் எண்டு நான் பாத்துக் கொண்டிருந்தனான்.”

“முடிவெடுக்க முடியாமல்தான் நான் தவிச்சுக் கொண்டிருந்தனான். குண்டு வெடிச்ச அண்டைக்கு உன்ரை நினைவு அடிக்கடி வந்தது. அண்டைக்கே முடிவெடுத்திட்டன். உனக்கு இன்னும் விருப்பம் இருந்தால் நாங்கள் ரண்டு பேரும் கலியாணம் செய்யலாம்” என்றாள்.

“நிச்சயமா. ஆனால் உன்ரை அப்பா அம்மா சம்மதிப்பினமா?” என்றான் இளங்கோ.

“இது என்ரை முடிவு. அப்பா அம்மா சம்மதிச்சால் நல்லா இருக்கும். ஆனால் அவை சம்மதிக்காட்டிலும் என்ரை முடிவு மாறாது.“ என்றாள் ரெஜினா. 

(முற்றும்)

ABOUT THE AUTHOR

POST YOUR COMMENTS

Most Popular