HomeTNC Talentsவாழ்க்கை சவால...

வாழ்க்கை சவால்களை சமாளிக்க (சந்தோசமாக) பிள்ளைகளை வளர்ப்பது

-

Article from 2023 Kalai Vizha 2023 Magazine.

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது – திருக்குறள் (68)

விளக்கம்:

பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்கினால், அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும் அனைவருக்கும் அக மகிழ்ச்சி தருவதாகும்.

கடல் கடந்து கண்டங்கள் கடந்து ஈழத் தமிழர்களான நாங்கள் இன்று உலகின் பல நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றோம். எமது தாய் நாடான ஈழத்தில் குடும்பங்களாகவும் சின்ன சமூகங்களாகவும் ஓர் அடையாளத்துடன் வாழ்ந்துவந்த நாம், எமது நாட்டின் இனப்போர் மற்றும் பொருளாதார குறைவால் இப்படி எமது பிறந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டி வந்தது. எமது மூதாதையினரைப் பார்த்தோமானால் , அவர்கள் பல்வேறு தொழில்களை இயற்கையை நம்பி செய்து வந்தார்கள். அதற்கு அவர்கள் காலையில் சூரிய உதயத்திற்கு  முன் எழுந்து வயலுக்கோ கடலுக்கோ சென்று, மத்தியான சுடு வெயிலில் வேலை செய்து சாயாந்தரத்தில் இருள் வரும்வரை பணிகள் புரிந்து களைத்து இளைத்து உழைத்தார்கள். அதேபோல் அவர்கள் பிள்ளைகளும் கஷ்டப்பட கூடாது என்பதற்காக பாடசாலைகளை அமைத்து, பள்ளிக்கு எங்களை அனுப்பி படிக்க வைத்தார்கள். அவர்களது குறிக்கோள் தமது அடுத்த தலைமுறை தங்களைப் போல் கஷ்டப்படாமல் வாழ வேண்டும் என்பது. அவர்களது எதிர்பார்ப்பின் படி நம்மில்  பலர் மேற்கு நாடுகளுக்கு வந்து வளமாக நலமாக வாழ்கின்றோம். அது ஓர் மிக்க சந்தோஷப்பட வேண்டிய விடயம் மட்டுமன்றி எமது பெற்றோர்களைப் பாராட்ட வேண்டிய விடயம்.

நாம் எமது தற்போதைய நிலமையைப் பார்த்தோமென்றால் எமது வாழ்க்கை பாதி ஈழத்திலும் மற்ற பாதி சிலிக்கன் வலி போன்ற  மேலை நாடுகளிலும் போய்க் கொண்டிருக்கின்றது. ஆனால் எமது பிள்ளைகளோ மேலை நாடுகளில் பிறந்து அந்த வாழ்க்கை சூழல்களில் வாழ்ந்து வருபவர்கள். எங்களது வாழ்க்கையின் அனுபவங்களும் மற்றும் கண்ணோட்டமும்  மிக்க வித்தியாசமானவை. நாம் இன்று வாழும் தேசத்தைப் பார்த்தால், ஈழத்தைப் போன்றன்றி, வாய்ப்புகள் ஏராளம். பாடசாலைகளில் படிப்பிக்கும் முறை தொடக்கம் வெளியில் சின்ன வயதிலிருந்தே வேலை செய்யும் வாய்ப்புகள் அதிகம். 

அதேநேரம், இங்கத்தைய சூழல் காரணமாக எமது பிள்ளைகளுக்கு மன அழுத்தங்களும் அதிகம். இப்படியான சூழ்நிலையில் குழந்தைகளை சந்தோசமானவர்களாகவும் அதே நேரம் அவர்கள் எதிர்நோக்கும் சவால்களை மன அழுத்தங்கள் இல்லாமல் சந்திக்க இளம் பெற்றோர்கள் கடைப்பிடிக்க கூடிய நான் அறிந்த சில குறிப்புகளை இக் கட்டுரையில் பகிர உள்ளேன்.

Busy time vs Free time: எமது மேற்குலக வாழ்க்கை மிகவும்  வேலைப்பளு  கூடியது. அதனால் வேறு வேலை செய்ய எமக்கு நேரம் குறைவு. அதனாலும் மற்றவர்களின் அழுத்தங்களாலும் நாம் எமது பிள்ளைகளை பல வகுப்புக்களில் சேர்த்து அவர்களுக்கு  எந்த ஒரு விடயத்தையும் யோசித்து செய்வதற்கு நேரம் கொடுப்பதில்லை. அது மட்டுமன்றி ஒவ்வொரு விடயத்திருக்கும் எமது பிள்ளைகள் ஒலிம்பிக்கிற்கு போகப் போவது போல் வகுப்பு, பயிற்சி அதன் பின் வீட்டுப் பயிற்சியென்று அவர்களுக்கு யோசனை செய்து மனதில் வருவதை செயலாக்க நேரம் கொடுப்பதில்லை. நாங்களும் எமது முதலாவது பிள்ளையுடன் இந்த வலையில் சிக்கியிருந்தோம். பின் சனி ஞாயிற்றுக்கிழமைகளை வகுப்புகளை குறைப்பதன் மூலம் அவர்களின் யோசனைகளுக்கு அதிக நேரம் கொடுத்தோம்.

Private vs Public School: இது ஓர் சர்ச்சைக்குரிய விடயம். எனது பார்வையில் அரச பள்ளியில் பிள்ளைகள் படிப்பதன் மூலம் அவர்களுக்கு பல வழிகளில் நன்மையுள்ளது. அரச பள்ளியில் மாணவர்கள் அதிகம். அதனால் அவர்கள் பலதரப்பட்ட மாணவர்களுடன் பழகி பல விதமான அனுபவங்களைக் கற்றுக் கொள்வார்கள். அது மட்டுமன்றி மாணவர்கள் பல சமூகப் பொருளாதாரமான வாழ்வின் பின்னணியிலிருந்து வருவார்கள். அப்படியான சூழ்நிலையில் படித்து போட்டியிட்டு மேலே வருவதன் மூலம், அவர்கள் எதிகாலத்தில் உலகத்தில் விரிந்த நிலைமைகளை எதிர் நோக்க தயாராக வருவார்கள். அதற்கு மேலாக தனியார் பள்ளியின் செலவு மிக்க கூடியது. அதை வங்கியில் முதலீடு செய்வதன் மூலம், குழந்தைகள் வளர அவர்கள் வியாபாரத்திற்கோ அல்லது முதல் வீடு வாங்கவோ கொடுக்கலாம். 

Learning many things vs doing few things passionately: பிள்ளைகளின் சிறு வயதில் அவர்களுக்கு பல கலைகளை அறிமுகப்படுத்துவது மூலம் அவர்களது திறமைகளையும், ஆர்வங்களையும் அவர்கள் கண்டறிய முடியும். வயது கூடக்கூட அவர்கள் செலவளிக்கக் கூடிய நேரம் குறைந்து போகும். அதனால் அவர்களது ஆர்வத்தை அவதானித்து அதற்கேற்ப தெரிவு செய்வது அவசியம். அப்படி குறைக்காது போனால், குழந்தைகள் எப்போதும் களைப்பாக இருப்பது மட்டுமன்றி சந்தோசம் இல்லாத பிள்ளைகளாக மாறிவிடுவார்கள். இப்படி சில விடயங்களை ஆர்வங்களுடன் நீண்ட காலம் தொடர்ந்து செய்வது பல்கலைக்கழக அனுமதிப் பத்திரங்களில் குறிப்பாக பார்க்கப்படும் என்று ஆராய்சி அறிக்கைகள் கூறுகின்றன.

Natural vs Forced leadership: எமக்கு எமது பிள்ளைகள்  தாம் செய்யும் எல்லா விடயங்களிலும் மேலே போய் தலமைதத்துவம் வகிக்க வேண்டுமென்று ஆசை. அதனால், பிள்ளைகள்  தங்களின் விருப்பத்தில் பார்க்க பெற்றோரின் ஆசையால் மேலே தள்ளப்டுகிறார்கள். இதனால் தமது பிள்ளைகளுக்கு வரும் மன அழுத்தங்களையும் கவலைக் கோளாறுகளையும் பெற்றோர்கள் காண மறுக்கிறார்கள். சில விடயங்களில் எமது பிள்ளைகள் தலமைத்துவம் எடுப்பார்கள், மற்ற விடயங்களில் அவர்கள் அணியினராக இருப்பார்கள். இதனால் அவர்கள் உண்மையான வாழ்க்கைக்கு தயாராவார்கள்.

Parents guiding vs doing the work: நாம் எமது சிறு வயது வாழ்க்கையை நினைத்துப் பார்த்தால், எமது பெற்றோருக்கு நாம் படிப்பது என்னவென்று கூட தெரியாது, அது மட்டுமன்றி அவர்கள் எமது படிப்பில் ஈடுபடுவது சரியான குறைவு. எமக்கு ஏதாவது கலை தேவையென்றால் அவர்கள் அதைச் சொல்லித் தருவார்கள். இங்கு பெற்றோர்கள் பிள்ளைகளின் வேலைகளை தாமும் சேர்ந்து செய்து மட்டுமன்றி  சில வேளைகளில் பிள்ளைகளை அவர்களது வேலைத்திட்டங்களை தொடவே விடமாட்டார்கள். பிள்ளைகள் தங்கள் சுயமாக முயற்சியெடுத்து  திட்டங்களை செய்வதன் மூலம், திட்டங்களின் குறைகளை நிறைகளை தாமே உணர்ந்து பிற்காலத்தில் அப்படியான பிழைகளை செய்யாமல் இருக்க அறிந்து கொள்ள முடியும்.

Social Skill Development: நான் எனது சமூகத்தில் இரண்டு விதமான பிள்ளைகளை அவதானித்து இருக்கிறேன். ஒன்று எப்போதும் பெரியவர்கள் சொல்லவதைக் கேட்டு அவர்கள் சொன்ன மாதிரியே செய்பவர்கள். மற்றவர்கள், பெரியவர்களை மதிக்காமல் தங்கள் பாட்டில் திரிபவர்கள். என்னைப் பொறுத்தவரை இது இரண்டுமே சரியான வழியல்ல. சின்ன வயதிலிருந்தே பிள்ளைகளுக்கு பகுப்பாய்வுத் திறனுடன் கதைக்க (விவாதிக்க) பழக்குவது நல்லது. நான் இப்படித்தான் செய்வேன், அப்படித்தான் செய்வேன் என்று அடம் பிடிக்காமல், அதற்கான விளக்கத்தையும் சொல்லி அதன் பின் அதன் விளைவுகளையும் எடுத்துரைத்து சொல்வதன் மூலம் கூடுதலான பெரியவர்களின் ஆசீர்வாதத்தைப் பெறமுடியும்.

Precision Coaching: எமது சமூகத்தில் இங்கிருக்கும் கூடுதலான பெற்றோர்கள் படித்தவர்கள். அதன் மூலம், பிள்ளைகள் எந்த பாடங்களில் எந்த அத்தியாயங்களில் சிரமப்படுகிறார்கள் என்று பார்த்து அதற்கான படிப்புகளுக்கு உதவி செய்வதால், பிள்ளைகள் ஒட்டுமொத்தமாக பாடங்களில் நன்றாகச் செய்ய முடியும். 

அதோடு அமெரிக்கப் படிப்புகளில் நிறைய கட்டுரை எழுதுவது, புத்தகங்கள் வாசித்து அதைப்பற்றி சுருக்கம் எழுதுவது, வகுப்பில் அவற்றைப் பற்றி வாதிப்பது என்று பல விதமாக கற்பிப்பார்கள். இது எமது முந்தைய படிப்பு முறையை விட மிக வித்தியாசமானது. அதற்கு உதவி செய்வதற்கு நாங்கள் பாடசாலைக்கு வெளியே பாடம் சொல்லிக் கொடுக்கும் தனியார் வகுப்பில் சேர்த்து அவர்களுக்கு பாடங்கள் கற்க உதவி செய்வதுடன் பிள்ளைகளின் மனது துணிவுகளையும் அதிகரிக்கலாம்.

Free work vs Paid job: இங்கு உயர்நிலைப் பள்ளிகளைப் பார்த்தால் ஒரு சில மணித்தியாலங்கள் தொண்டர் பணி செய்யும்படி கேட்பார்கள். இது ஒரு  நல்ல விடயம். பிள்ளைகளுக்கு தொண்டு செய்யும் மனப்பான்மை  வளர்ப்பது மட்டுமன்றி மற்றவர்களின் சிக்கல்களையும் அறிய ஒரு வாய்ப்பாக இருக்கும். ஆனால் சில பெற்றோரோ பிள்ளைகளை நிறைய தொண்டர் சேவை செய்ய வைப்பார்கள். இதனால் பிள்ளைகளுக்கு மற்ற வேலைகள் செய்ய நேரம் இல்லாமல் போகும். அது மட்டுமன்றி எனது கொள்கையின் படி பணத்துக்கு சின்ன வயதிலிருந்தே வேலை செய்வது முக்கியம். பணத்திற்கு வேலை செய்வதன் மூலம் 1. மேல் அதிகாரிகளுடன் எப்படி பழகுவது, கூட வேலை செய்பவர்களுடன் அனுசரித்துப் போவது சின்ன வயதிலேயே தெரிய வரும், 2. பிள்ளைகளுக்கு பணம் உழைப்பது எவ்வளவு கடினம் என்று தெரிய வரும், 3. வேலைத்தளத்தில் பன்முறையான தொழில்களும் தொழில் செய்யும் ஆட்களுடன் பழக சந்தர்ப்பம் கிடைக்கும். 

Tell them about Your life Challenges: நாம் ஈழ நாட்டவர் பல இடையூறுகளுக்கும் மத்தியில் உயிர் பிழைத்து, நாடுகள் கடந்து, புது மொழிகள் கற்று என்று பல வாழ்க்கை சவால்களை மீறி இங்கு வாழ்கிறோம். நாம் ஒவ்வொருவருக்கும் ஓர் நீண்ட (சோக) கதை பின்னால் இருக்கின்றது. அதை நாங்கள் மூடி மறைத்து பிள்ளைகளை நல்ல கதைகளை மட்டும் சொல்லி வளர்க்கக் கூடாது. அவர்களுக்கு எமது வாழ்க்கைப் பயணத்தைப் பற்றி சொல்ல வேண்டும். கூறும்போது அவர்கள் உதாசீனமாக கேட்பதாக இருந்தாலும், அவர்கள் வளர அதைப்பற்றி புரிந்து பாராட்டுவார்கள். எனது மூத்த மகள், நாம் விடாமல் தொடர்ந்து ஈழத்தமிழரின் கஷ்டங்கள் மற்றும் பண்பாடுகள் பற்றி சொன்னதால், இப்போது பல்கலைகழகத்தில் தமிழையும், முக்கியமாக ஈழத்தமிழ் எவ்வாறு உலகின் மற்றய தமிழுடன் வித்தியாசமான தென்றும் ஆராய்சி செய்து கொண்டிருக்கிறார்.

Finally accept it is their life: எங்கள் எல்லோரினதும் வாழ்க்கையின் முக்கிய குறி, எமது பிள்ளைகள் எங்களிலும் பார்க்க நன்றாக படித்து வாழ்க்கையில் எமது அந்தஸ்திலும் மேலே போக வேண்டும் என்பது. நாமெல்லாம் இங்கு ஒன்றுமில்லாது வந்து, இப்போது அமெரிக்காவின் நடுத்தர வர்க்கத்தில் இருக்கிறோம்.  அது ஓர் பெரிய உயர்வு. அதைப்போல எமது பிள்ளைகளும் எமக்கு மேலே போவார்கள் என்பது இலகுவான குறியல்ல. அவர்கள் கூடுதலாக நீண்ட காலத்தில், இன்னும் ஒன்றோ இரண்டோ சந்ததியில், சராசரி அமெரிக்கர்களாகவே மாறுவார்கள். அது தான் புலம்பெயர்ந்தவர்களின் வாழ்க்கைக் கதை. அதனால் பிள்ளைகளை கொடுமைப்படுத்தாமல், அவர்களுக்கு அறிவு சொல்லி, வழி காட்டி, அவர்களை ஊக்கப்படுத்தி, அதன் மூலம் ஓர் சந்தோசமான பிள்ளைகளை வளர்ப்பதன் மூலம் எமது சமூகத்தின் நிலையை உயர்த்தலாம்.

ABOUT THE AUTHOR

Ruban Kanapathippillai
Ruban Kanapathippillai
TNC President 2018.

POST YOUR COMMENTS

Most Popular