HomeTNC Talentsசங்கீத மாமேதை...

சங்கீத மாமேதைகள் வரிசையில் பாபநாசம் சிவன்

-

Article from 2023 Kalai Vizha Magazine

கர்னாடக இசையின் பிதா மகன்களாகப் போற்றப்படுபவர்களாகவும் மும்மூர்திகளாகப் பூஜிக்கப்பட்டு வருபவர்களாகவும் தியாகராஜ சுவாமிகள், சியாமா சாஸ்திரிகள், முத்துஸ்வாமி தீட்சிதர் ஆகியோர் விளங்குகின்றனர். கர்நாடக இசைப்பரப்பில் இன, மத வேறுபாடின்றி இம்மூவரையும் கெளரவமான ஸ்தானத்தில் வைத்திருப்பது வரவேற்கத்தக்கது. மூம்மூர்த்திகளாக கருதப்படும் இவர்கள் இயற்றிய உருப்படிகள், கீர்த்தனைகள் யாவும் தெலுங்கு மொழியில் மாத்திரமே உருவானவையாகும். 

இவர்கள் காலத்திற்கு முன்தோன்றி தமிழ் இசைக்குப் புத்துணர்ச்சியும் உத்வேகமும் கொடுத்த தமிழ் மும்மூர்த்திகளை நாம் குறைவாக எடைபோடவோ, மறந்து விடவோ முடியாது. இவ்வரிசையில் முதலாவதாக சீர்காழி முத்துத்தாண்டவர் (1560-1640).  இவர் இயற்றிய பாடல்கள் பல…….”ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கை காணக்கண் ஆயிரம் வேண்டாமோ ” என்ற மாயாமாளவகௌளை ராகத்தில் இயற்றிய பாடல், அறுபது, எழுபதுகளில் இசைக்கச்சேரி மேடைகளிலும், இலங்கை வானொலியிலும் பலமுறை கேட்டு ரசித்ததுண்டு. அதேபோன்று “சேவிக்க வேண்டுமையா -சிதம்பரம் ” ஆபோகி ராகத்தில் அமைந்த அந்த பாட்டை பெரிய இசை வித்துவான்களால் கச்சேரி மேடைகளில் இருந்து இசைக்கும் பொழுது அதில்வரும் ஆலாபனைகளை ரசித்து ஆர்ப்பரிக்கும் மக்கள் கண்கொளாக் காட்சியாகும். உலக மேடைகள் பலவற்றில் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் தனக்கே சொந்தமான கம்பீர குரலில் பாடி மக்களின் ஏகோபித்த கரகோஷத்தையும் பாராட்டையும் பெற்றிருந்தார்.

அடுத்து, சீர்காழி அருணாசலக் கவிராயர் (1712-1779), இவர்களும் தமிழ் சங்கீதப் பாடல்கள் பல இயற்றியுள்ளார்கள். “யாரோ இவர் யாரோ என்ன பேரோ” என்று ஆரம்பிக்கும் அந்த அற்புதமான பைரவி ராகத்தில் அமைந்த பாடல் இன்றுவரை இசைக் கச்சேரிகளை அலங்கரிப்பதைக் காணமுடிகின்றது.

“ஏன் பள்ளி கொண்டீர் ஐயா” என்ற மோகன ராகப் பாடலை M. S. சுப்புலட்சுமி அவர்கள் இனிமையான குரலில் உருக்கத்துடன் இசைக்கும்பொழுது, எம்மையும் ரங்கநாதனின் சந்நிதானத்துக்கே அழைத்துச் சென்ற உணர்ச்சிப் பிரவாகத்தை உண்டுபண்ணியுள்ளார்.

தமிழ் மூவரில் அடுத்து தில்லைவிடங்கன் மாரிமுத்தாபிள்ளை அவர்கள் (1712-1787). இவர் இயற்றிய பாடல்கள் பல நடராஜப் பெருமானைப் போற்றிப் பாடப்பட்டவையாகும்.  “காலைத்தூக்கி நின்றாடும் தெய்வமே” என்னும் யதுகுல காம்போதி ராகத்தில் அமைந்த பாடல், “ஒருக்கால் சிவ சிதம்பரம் என்று சொன்னால் ” என்ற ஆரபி ராகத்தில் அமைந்த பாடல்களை எடுத்துக்காட்டாகக் கூறலாம். 

ஆகவே இசை உலகின் முன்னோடிகள் எனக்கருதப்படும் தமிழ் மும்மூர்த்திகளான இப்பெருமான்களை தமிழர்களாகிய நாம் நினைவுகூர்ந்து கௌரவிப்பது எமது கடமையாகும்.

தமிழ் இசைத்துறையின் மும்மூர்த்திகளைத் தொடர்ந்து, ஒரு புரட்சியை ஏற்படுத்தியதுமல்லாமல், புதிய பரிமாணத்தையும் தமிழ் இசைக்குள் புகுத்தியவர்தான் இசைப் பேரறிஞர் பாபநாசம் சிவன் என்ற இசைச் சிற்பி. இவரது ஆக்கங்கள் சில கச்சேரி மேடைகளிலும் நடன அரங்குகளிலும் மக்கள் ஆதரவும் கரகோஷமும் பெற்று அந்த நிகழ்ச்சிக்குப் பெருமை சேர்த்தன. 

என்ன தவம் செய்தனை யசோதா” என்னும் காபி ராகப் பாடலை கச்சேரி மேடைகளில் பாடியதும் மக்கள் கொடுக்கும் கைதட்டலும் ஆதரவும் போலவே அதே உருப்படியை “பதம்” வரிசையில் பரத நாட்டிய அரங்கத்தில் ஆடியதும் வானைப்பிளக்கும் கரகோஷத்தைப் பெறுகிறது. இதனைப் போலவே “இடது பாதம் தூக்கி ஆடும் நடராஜன்” என்னும் கமாஸ் ராக உருப்படி,”காணக்கண் கோடி வேண்டும்”என்ற காம்போதி ராக உருப்படி, “நான் ஒரு விளையாட்டுப் பொம்மையா” என்ற நவரச கன்னட ராகத்தில் அமைந்த உருப்படி, இன்னும் பல, இசை, நடன மேடைகளைச் சிறப்பித்து மக்கள் ஆதரவைப் பெற்றன என்றே சொல்லலாம்.

பிற்காலத்தில் இசைத்துறையின் ஜாம்பவானாக விளங்கிய பாபநாசம் சிவன் அவர்கள் தமிழ் உலகிற்கு அளித்த இசை பெருங்கொடை என்றே சொல்லலாம். D. K. பட்டம்மாள் அவர்கள் யதுகுல காம்போதி ராகத்தில் பாடிய “குமரன்தாள்” என்று ஆரம்பிக்கும் பாடல், “பராத்பரா பரமேஸ்வரா” என்று வாசஸ்பதி ராகத்தில் பாடிய பாடல்” போன்றவை எம்மை ஏதோ ஒரு புது உலகுக்கு அழைத்து செல்லுவது போன்ற உணர்ச்சியை உருவாக்குகின்றன.

இதே போன்று சிவன் அவர்களது பாடல்களான “பராசக்தி ஜனனி” என்று ஆரம்பிக்கும் ஹம்சத்வனி ராகப் பாடலும், “கடைக்கண் நோக்கி காவாததுமேனோ” என்னும் தோடி ராகப் பாடலும், “நீ இரங்காய் எனில் புகழ் ஏது” என்ற அடானா ராகப் பாடலும் மகாராஜபுரம் சந்தானம் அவர்களது குரல்வளத்தில் ஒலிக்கும் போது கேட்கும் இனிமை சொல்லில் வர்ணிக்க முடியாது. “தந்தை தாய் இருந்தால் உலகத்தில் எமக்கிந்தத் தாழ்வெல்லாம் வருமோ ஐயா” என்ற சண்முகப்பிரியா ராகத்தில் N. C. வசந்தகோகிலம் அவர்களின் தேன்சொட்டும் இனிமையான குரலில் பாடிய இப்பாடலை எப்பொழுது கேட்டாலும் அதன் சுவை எம்மை உடல் சிலிர்க்க வைக்கிறது. அன்னார் இப்பூவுலகில் சில காலமே வாழ்ந்தாலும் அவர் பாடிய இப்பாடல் இனிமை குன்றாது என்றும் நிலைத்திருந்து சாகாவரம் பெற்று விளங்கும்.

திரை உலகிற்கும் சிவன் அவர்களது பங்கு பாரிய அளவில் உதவியது என்று சொல்லலாம். ஒரு காலம் அன்னாரது பாடல்களாலே திரைப் படங்கள் வெற்றிப் படங்களாக வெளிவந்ததும், மக்கள் வெள்ளம் அந்தப் பாடல்களுக்காகவே திரையரங்குகளை நிரம்பி வழியச் செய்ததும் வரலாறு. M. K . தியாகராஜ பாகவதர், P. U. சின்னப்பா, M.S. சுப்புலட்சுமி போன்றவர்களின் கம்பீரமான குரல் வளமும் சிவன் அவர்களின் புகழையும் பாடியவர்களின் புகழையும் மலை உச்சிக்கே கொண்டு சென்றது. “திருநீலகண்டன்,” “சிந்தாமணி,” “சாவித்திரி,” “அம்பிகாபதி,” “சிவகவி” போன்ற படங்கள் அன்றைய காலகட்டத்தில் பெரிய மதிப்பையும் வரவேற்பையும் பெற்று விளங்கின. இவர்களின் பாடல்களே படங்களின் வெற்றிக்கு வழி வகுத்தது என்பதில் ஐயமில்லை. இவரது ஆக்கங்கள் பல வெள்ளித்திரைகளில் மாத்திரம் அல்லாது, அதே பாடல்கள் இசை மேடைகளிலும் இடம் பெற்றுள்ளன. அந்த வரிசையில் “சரவண பவ எனும் திருமந்திரம்,” “அம்பா மனம் கனிந்து,” “ஒரு நாள் ஒரு பொழுதாகிலும்,” “சிதம்பர நாதா திருவருள் தாராய்,” “தீன கருணாகரனே நடராஜா” என்ற தியாகராஜ பாகவதரால் பாடிய பாடல்களைச் சான்றாகக் குறிப்பிடலாம்.

எல்லாவற்றிற்கும் மேலாக “ஸ்ரீ ராம சரித கீதம்” எனும் இராமாயண கீதத்தை, சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் 45 நிமிடம் வழங்கிய பாடல், சிவன் அவர்களுடைய ஆக்கங்களுக்கு எல்லாம் மகுடம் வைத்தாற்போல் அமைந்தது எனலாம்.

பாபநாசம் சிவன் அவர்கள் தமிழ் இசைக்கு அளித்த அளப்பரிய சேவையைப் பாராட்டிப் பல கெளரவப் பட்டங்கள் அவரைத் தேடி வந்தன: “சிவபுண்ணிய கானமணி,” “சங்கீத கலாநிதி,” “சங்கீத சாகித்ய கலாசிகாமணி,” “பத்மபூஷன்,” “இசைப் பேரறிஞர்,” போன்றவற்றைக்  குறிப்பிடலாம். 

இத்துடன் மக்களால் “தமிழ் தியாகராஜர் “என செல்லமாகவும் அன்பாகவும் அந்தநாளில் அவர் அழைக்கப்பட்டார். பாபநாசம் சிவன் அவர்களது பூதவுடல் என்றோ மறைந்தாலும் அவரது புகழுடல் என்றும் சங்கீத்தில் வாழும்.

தமிழ் மொழி, கலை, கலாச்சாரம் இவை மூன்றும் மங்காது மென்மேலும் உன்னத வளர்ச்சி பெற தமிழர்களாகிய எமது அர்ப்பணிப்பும் அயராத உழைப்பும் இன்றியமையாததும் கடமையுமாகும். செக் நாட்டுப் பேராசிரியர் கலாநிதி கமில் ஸ்வலபில் அவர்களது வாக்கியம் இவ்விடத்தில் பொருத்தமாக அமைவதைக் காணலாம்.

“It is the task of the Tamils themselves to acquaint the world’s cultural public with the important contributions of Tamil culture to the world’s civilization.”

-Prof. Kamil Zvelebil.

ABOUT THE AUTHOR

Mr. P. Rajeswaran
Mr. P. Rajeswaran
Community Contributor

POST YOUR COMMENTS

Recent Articles

Most Popular