Article from Kalai Vizha 2024 Magazine.
உலகமெங்கும் தமிழர்கள் பரந்து வாழ்ந்தாலும், அங்கெல்லாம் எம் ஈழ மக்களும் கலந்திருப்பதால் இலங்கைத் தமிழரதும், ஈழத்தினதும் பெயரும் புகழும் திக்கெங்கும் பரவிக்கொண்டுதான் இருக்கிறது. இதற்கு உதாரணமாக இவ்வருடம் ஆவணி மாதம் 2ஆம், 3ஆம், 4ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற Yarl IT Hub இன் Innovation Festival இலில் அமெரிக்காவிலிருந்து வருகைதந்து பங்குபற்றிய யாழ்ப்பணத்தைச் சேர்ந்த திரு. கனகசபை ரமோஷன் அவர்களிடம் சகோ கிரியேசன்ஸ் கண்ட செவ்விமூலம் அவர் தன்னார்வத் தொண்டராக ஈழத்தமிழர்களுக்கு ஆற்றிவரும் உன்னத சேவைகள் பற்றி அறிந்தவற்றை அனைவரும் தெரிந்துகொள்ளவும் ஏனையவர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் இங்கு எழுத்து வடிவில் பகிர்கின்றோம்.
திரு.கனகசபை ரமோஷன் அவர்கள் யாழ்ப்பாணம் பரி யோவான் கல்லூரியிலும், நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையால் கொழும்பு இந்துக் கல்லூரியிலும் கற்றபின் வெளிநாடு நோக்கிப் புலம்பெயர்ந்தார். கல்வி தந்த இவ் இரு கல்லூரிகளும் தன்னிரு கண்களாகவே கருதி இன்றுவரை இரு பாடசாலைகளுக்கும் இலங்கைத் தமிழருக்கும் தன்னாலான சேவைகளை ஆற்றிவருகின்றார்.
அமெரிக்காவில் இலத்திரனியல் சிப்களைத் தயாரிக்க மூலாதாரமாயுள்ள சிலிக்கனின் பெயருடைய சிலிகான் வெலி நகரில் 25 வருடங்களுக்கும் மேலாக வசித்துவரும் இவர் Chip Design இல் பணியாற்றினார். இவர் Intel நிறுவனத்திலும், Prism Circuits எனும் Startup இலும் பணியாற்றிய அனுபவங்களால் Apple நிறுவனத்தில் பணியாற்றும் வாய்ப்பினை பெற்று உயர்ந்தார்.
ஈழத்தில் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கான தனது சேவையை 2003இல் ஆரம்பித்தார். தன் மனைவியுடன் இணைந்து 2004 இல் கிளிநொச்சியில் வன்னிரெக் (VanniTech) நிறுவனம் ஊடாக 2 வாரங்கள் தங்கியிருந்து மாணவர்களுக்குக் கற்பித்திருந்தார். இதுவே இவரது தாய்நாட்டின் மீதான தன்னார்வத் தொண்டின் முதற் படி என்பதுடன் இவ்வாறான சேவையை ஆற்றவும் தூண்டியது. கடந்த 15 வருடங்களாக ITEE அறக்கட்டளை நிறுவனத்த்தின் CTO ஆக கல்வி, வேலை வாய்ப்பு, முயற்சியாண்மையை அடிப்படையாகக் கொண்டு பணியாற்றுகிறார்.
தனது தேசம் விட்டு அமெரிக்காவில் வசித்தாலும் தான் பிறந்த மண்ணின் மீது கரிசனை என்றுமே இருந்து கொண்டிருந்தது. தான் கற்றுக்கொண்டவை மூலம் பிறந்த மண்ணுக்கு சேவைகளை வழங்க முன்வந்தார். 2003 இல் ஆரம்பித்த தொண்டு இன்று வியாபித்து நிற்கின்றது.
உயர்தரக் கற்கைக்குப் பின்னர் பல்கலைக் கழகத்துக்குத் தெரிவாகாத, உயர் கல்விகளைக் கற்க வசதியற்ற மாணவர் நலன்கருதி யாழில் 2011 இல் உருவாக்கப்பட்ட யாழ் IT Hub இல் தன்னாலான பங்கினை வழங்கியுள்ளார். சிறியளவில் இருந்த இந் நிறுவனம் இன்று பெரியளவில் வளர்ந்து நிற்பதை எண்ணியும், இதன் மூலமும் அதன் நோக்கம் நிறைவேறிவருவதை எண்ணியும் மனம் பூரிப்படைகின்றார்
குறித்த மாணவர்களுக்கு Yarl IT Hub இன் ஊக்கி தகவல் தொழில்நுட்பம் சார்ந்த இலவச கற்கை நெறியை போதிக்கும் அதேவேளை வாழ்க்கைக்கு அவசியமான உடல் மற்றும் உள ஆரோக்கியம், தலைமைத்துவம், மொழி உட்பட பல்வேறு பயிற்சிகளை வழங்குவதன் ஊடாக பூரண தகைமைகளைக் கொண்ட மாணவராக இதுவரை 500 க்கும் மேற்பட்டவர்களை உருவாக்க இவரும் ஒரு காரணமானவராக விளங்கிவருகின்றார்.
மேலும் அமெரிக்கா வாழ் யாழ் பரியோவான் கல்லூரியின் பழைய மாணவர் ஒன்றியத் செயலாளராகவும் உள்ளார். அதன் மூலமாக யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரி, சுண்டிக்குளி மகளிர் கல்லூரியில் அமெரிக்க பழைய மாணவர்களது பங்களிப்பு ஊடாக தரம் 6 முதல் உயர்தர வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு IT மற்றும் Robotics சான்றிதழ் கற்கை நெறியை ஆரம்பித்தார். இவற்றின் நவீன மாற்றங்கள் மற்றும் புதிய விடயங்கள் பற்றி சிலிக்கன்வெலியிலிருக்கும் முன்னணி கம்பனிகளின் விசேட நிபுணர்களிடமிருந்து தருவித்தும் வருகின்றார்.
ஆரோக்கியா லைப் சிஸ்டம்ஸ் (Arogya.Life) எனும் மென்பொருள் சேவை வழங்கும் நிறுவனத்தின் முதலீட்டாளராகவும் பங்குதாரராகவும் உள்ளார். Arogya.Life ஆனது இலங்கை மற்றும் வெளி நாடுகளிலுள்ள பல்வேறு வைத்தியசாலைகளின் நிர்வாகத் திறனை அதிகரிக்கும் வகையில் நிர்வாகக் கட்டமைப்புகளுக்கேற்ற Software இனை உருவாக்கி வருகின்றது. தனது தொழில்நுட்பம் சார் அறிவினைக் கொண்டு தனது சொந்த மண்ணிற்கு ஆற்றவிளையும் கனவுகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிவருகின்றார்.
இலங்கைத் தாயகத்திலிருந்து வெளிநாடுகளில் வாழும் ஏனையவர்கள் சொந்த மண்ணில் வாழும் மக்களுக்கு எவ்வாறான பணிகளை ஆற்றமுடியும் என்பதற்கு திரு.கனகசபை ரமோஷனும் உதாரணமானவர். விதைகள் மரமாகி பலன்தரும். ஆனால் அதன் பயன்கள் தனக்கல்லாவிடினும் அது நாளையவர்களுக்கு கிட்டும் என்பதே மகிழ்ச்சி எனக் கூறும் இவரைப்போல் வெளிநாடுகளில் வாழும் இன்னும் பல எம்மவர்கள் முன்வரவேண்டும்!
SAHO Creations Youtube Channel