விமானம் தரையைத் தொடும்போது என் மனம் விண்ணில் பறந்தது. எதிர்பார்ப்புகள் மனதை நிரைக்கும் பரபரப்புடன் கூடிய ஒரு துளள் உடலெங்கும் பரவியது. பதினைந்தாண்டுகளின் பின் என் தாய்மண்ணைப் பார்க்கப் போகிறேன். சில காலமாக என் மனதில் எழுந்த ஏக்கம் விரைவில் நிஜமாகப் போகிறது. விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தபோது நீர்த்துளிகள் நிரைந்த வெப்பம் என் முகத்தைத் தாக்கியது. அதை நான் இன்பத்துடன் அரவணைத்துக்கொண்டேன். டாக்சி ஒன்றில் ஏறி அமர்ந்து நான் தங்கவிருக்கும் ஹோட்டலுக்கு போகுமாறு கூறிவிட்டு நகரின் காட்சிகளை வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தேன். எங்கும் வாகன ஒலியும், மக்களின் ஆர்ப்பரிப்பும் என் மனதை ஈர்க்கவில்லை. இதைப் பார்க்க நான் இங்கு வரவில்லை. இங்கிருந்து கிளம்பியபோது எனக்கு பதின்மூன்று வயது. கிராமத்தில் பிறவைகளின் ஒலிக்கும், தடவிச்செல்லும் தென்றலுக்கும் பழகப்பட்ட எனக்கு இந்தக் காட்சிகள் வேடிக்கையாக இருந்தன. அன்று நான் வளர்ந்த நாட்டை விட்டு வெளியேறும்போது எதிர்காலத்தைப் பற்றி பல எதிர்பார்ப்புகள் என் சொந்தத்தை விட்டுப்போகிறோமே என்ற ஏக்கத்தை மறைத்துவிட்டேன்.
கிராம வாழ்க்கை மட்டுமே தெரிந்த எனக்கு இந்த நகரத்தில் எல்லாமே புதுமையாக இருந்தன. இன்று பதினைந்து வருடங்கள் பிற நாட்டில் நகர வாழ்க்கைக்குள் மூழ்கிய பின் கிராமத்தின் அமைதியையும், தொழில்நுட்பம் தொடாத அழகையும் மறுபடியும் பார்க்க மனம் ஏங்கியது. வீட்டுக்கு எதிரே இருந்த ராஜமாணிக்கம் கடை இப்போதும் இருக்குமா? பக்கத்து வீட்டில் வாழ்ந்த சிவலட்சுமி இன்னும் இருப்பாளா? மண்ணில் கால்புதைத்து மனமாற நடக்க முடியுமா? மிதிவண்டியில் ஊர் சுற்ற முடியுமா? உள்ளத்தின் ஆசைகள் பல.
காலப்போக்கில் போரும் அதனால் ஏற்பட்ட இழப்புகளும் சிறிது சிறிதாக மனதை விட்டுமறைந்தபோதும் இன்பம் கொடுத்த நிகழ்வுகள் மட்டும் பசுமையாக இருந்தன. இன்று அங்கு போரும் இல்லை, போர்க்களமும் இல்லை, போரட வீரனும் இல்லை. என் இளமைப்பருவ நினைவுகளை நோக்கி நான் அதிகாலையில் பேருந்தில் புறப்பட்டேன். காடுகளையும் வெளிகளையும் தாண்டி வண்டி செல்லும்போது சிறிது சிறிதாக என் சிறுவயதுக்குள் புகுந்துகொள்வது போல் ஒரு உணர்வு. என் வீடு எப்படி இருக்கும்? இப்போதும் வானை முட்டும் மாமரங்கள் இருக்கின்றனவா? அதில் கூடுகட்டும் குருவிகளும் இருக்கின்றனவா? நான் பட்த்தம் ஏற்றிய திடலில் சிறுவர் இன்று விளையாடுவார்களா?
என்னோடு ஓடி விளையாடிய திவாகர் இன்னும் அங்கு இருப்பானா? திவாகரும் நானும் இணை பிரியா நண்பர்கள். சிறுவயதில் அவனைத்தான் திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என்று கூறுவேன். எத்தனையோ தடவை எங்களுக்குள் விளையாட்டுத்திருமணங்கள் செய்து வைத்து, எங்கள் நண்பர்கள் மகிழ்வார்கள். ஊரை விட்டுப்போகப்போகிறேன் என்று அறிந்தபோது முதலில் அழுதவன் திவாகர்தான். “நீ இல்லாமல் எப்படி இங்கே இருக்கப்போகிறேன், அஞ்சலா?” என்றான். அவன் முகம் வாடியது.
“மீண்டும் உன்னைப் பார்க்க விரைவாக வருவேன்,” என்று நான் அவனுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றவில்லை. பின்னர் அவனை முகநூலில் பல தடவை தேடியும் காணவில்லை. இன்று வேறு யாரையும் திருமணம் செய்ய எனக்கு மனம் இல்லை. வண்டி என் ஊரில் நின்றபோது என் எதிர்பார்ப்புகள் மெல்ல சிதைய ஆரம்பித்தன. நான் எதிர்பார்த்த அமைதி அங்கே இல்லை. வேகமாக செல்லும் வாகனங்களும் அதன் ஒலிகளும் எங்கும் பரவியிருந்தன.
வண்டியிலிருந்து இறங்கி என் வீட்டை நோக்கி கால்நடையில் புறப்பட்டேன். குறுக்கிய சாலையில் வேகமாக செல்லும் மோட்டார்பைக்குடன் மோதிவிடாமல் ஒதுங்கி நடக்க ஆரம்பித்தேன். சாலையோரம் ஊர்க்கதை பேசியபடி நடக்கும் பெண்கள் எங்கே? மிதிவண்டியை உதைத்தபடி பள்ளிக்குச் செல்லும் பாலகர்கள் எங்கே? முன்பு வீதியில் காண்பவர்கள் எல்லாம் ஏதோ ஒரு விதத்தில் என் உறவினர். இன்றோ என் பார்வை அலசி தூரம் வரை எல்லாமே புதிய முகங்கள். அவர்கள் என்னை வினோதமாகப் பார்த்தனர்.அவர்களை பொறுத்த வரை நான்தான் இந்த ஊருக்கு புதியவள்.
என் வீட்டை அடைந்த போது இதயம் ஏமாற்றத்தால் நொறுங்கியது. ஒரு காலத்தில் சுத்தமான முற்றமும் செழித்து வளர்ந்த மரங்களுமாக இருந்த இடம் தற்போது காய்ந்து வெறிச்சோடிப் போய் இருந்தது. வீட்டின் கதவுகளும் ஜன்னல்களும் தங்கள் இறுதிக்காலத்தை நெருங்கிக்கொண்டிருந்தன. வீட்டுக்கு முன்னால் ராஜமாணிக்கம் கடையும் இல்லை, பக்கத்து வீட்டில் சிவலட்சுமியும் இல்லை. என்ன நடந்தது என் உறவுகளுக்கு? என்னை சிறுவயதில் பொற்றிப் பாதுகாத்தவர்கள் எங்கே போனார்கள்?
வேதனையுடன் கைப்பையை கீழே போட்டுவிட்டு தரையில் அமர்ந்தேன். என் அழகிய கிராமத்தின் வாசனை மாறியது காலம் செய்த குற்றம். என் மனதில் மட்டுமே இன்று என்னைப் போல நாடு விட்டுப் போன பலரின் மனதிலும் அதன் பழைய அழகு இன்னும் சித்திரமாக வாழ்கிறது. இங்கு எனக்காக எதுவுமில்லை. ஏமாற்றத்துடன் திரும்பச் செல்ல ஆயத்தமாக எழுந்து நின்றேன்.
“அஞ்சல!” என்றது ஒரு குரல் என் பின்னால். ஆச்சரியத்துடன் திரும்பினேன். அங்கே திவாகர், பதின்மூன்று வயது சிறுவனாக அல்ல, அழகிய இளைஞராக நின்றான். “நீங்கள் வரும்தாக அறிந்தேன், அதுதான் பார்க்க வந்தேன்,” என்றான் தயக்கத்துடன். முதல் தடவையாக அன்று காலத்தின் மாற்றத்தை நான் குற்றம் சொல்லவில்லை. அவனை ஓடிச்சென்று அணைத்துக்கொண்டேன். “என்றாவது ஒரு நாள் என்னைத் தேடி வருவாய் என்று காத்திருந்தேன்,” என்றான் அவன் என் செவிகளில்.