Article from 2024 Kalai Vizha Magazine
இன்று உலகின் பல பாகங்களிலும் ஈழத்தமிழர் வாழ்ந்து வருகின்றார்கள். சில கணிப்புகள் படி தமிழர்கள் உலகின் 132 நாடுகளில் வாழ்ந்து வருகின்றார்கள் எனவும், வத்திக்கன், அங்கோலா போன்ற இடங்களில் கூட சராசரி பத்துக்கும் குறைவான தமிழர்கள் இருக்கின்றார்கள் என கூறப்படுகின்றது.
ஆதியிலே இலங்கை முழுவதும் நாகர், இயக்கர் எனும் இரண்டு திராவிட இன மக்களே வாழ்ந்து வந்தார்கள் என்றும் கி. மு. 5ம் நூற்றாண்டு காலப்பகுதியில் அயல் நாடுகளின் படையெடுப்புகளினாலும் வாணிபத்தை மையமாகக் கொண்டு இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இலங்கையின் அமைவின் காரணமாகப் பெருந்தொகை மக்கள் வந்து கால் ஊன்றினார்கள் என்றும் சொல்லப்படுகின்றது. இதில் மத்திய கிழக்கு இஸ்லாமிய மக்கள் பெருமளவில் வாணிப நோக்குடன் வந்து குடியேறினார்கள் என்றும், காலக்கிரமத்தில் அப்படியாக வந்த ஆண்கள் தமிழ் பெண்களை மணமுடித்து இஸ்லாமியராக மாற்றம் பெற்றனர் என்றும் சொல்லப்படுகின்றது.
இத்தகைய சூழல்கள் காரணமாக இலங்கை முழுவதும் செறிந்து வாழ்ந்த தமிழ் இனம் வடக்கு- கிழக்கு பகுதிகளுக்கு தள்ளப்பட்டு அதை தம் பூர்வீக இடமாக இன்று அடையாளம் காட்டி வருகின்றனர் எனவும் கூறலாம்.
இலங்கை தீவில் மனித இனம் இற்றைக்கு 28,500 ஆண்டுகளுக்கும் முன்னிருந்தே வாழ்ந்ததற்கான சான்றுகள் இருப்பதை பேராசிரியர் இந்திரபாலா போன்ற தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அமெரிக்க பென்சில்வேனியா பல்கலைக்கழகம் 1970களில் கலாநிதி விமலா பெக்கிலே (Dr. Vimala Begley) தலைமையில் இலங்கையில் அகழ்வாராய்ச்சி நடாத்தியது. புத்தளம் பொம்பரிப்பு என்ற இடத்திலும் யாழ் கந்தரோடையிலும் தாழி அடக்கங்கள் (Urn burials) மற்றும் பிராமி (Brahmi) எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட உலோகத்தகடுகள் என பல ஆயிரம் கண்டுபிடிக்கப்பட்டன. இவை பண்டைய திராவிடங்களின் மரபு வழி பண்பாட்டு குறியீடுகளாகும்.
இதே போன்று ஏகந்தை, பாணமை, அம்பாறை, குடுவில், சேருவில, கதிரவெளி போன்ற இடங்களில் தாழி அடக்க குடுவைகளும், பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட பாறைக்கற்கள் பலவும் கண்டுபிடிக்கப்பட்டன. இவை 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று கணிக்கப்பட்டுள்ளது.
தெற்கில் உள்ள திஸமஹராம எனும் இடத்தில் கி. மு. 200 ஆண்டுகளுக்கு முந்திய தமிழ் பிரமி எழுத்து பொறிக்கப்பட்ட படிவத்தை கண்டெடுத்துள்ளதாக ஜேர்மனிய அகழ்வாராய்ச்சி மையம் கூறியுள்ளது (The Hindu, 24-06-2010).
மேலும் செம்மொழிகளாகக் கருதப்படும் கிரேக்கம், அந்த நாட்டில் கூட பெருமளவில் பாவனையில் இல்லை. இலத்தீன், இன்று உலகில் எங்கும் பாவனை அற்றுபோய்க்கொண்டிருக்கின்றது. கீபுரு (Hebrew) அழிந்துபோவதை தடுப்பதற்காக பாலர் வகுப்புகளில் இருந்து இஸ்ரேலில் கற்பித்து வருகிறார்கள். சமஸ்கிருதம் இந்து ஆலயங்களில் ஆச்சாரியார்களின் சமய பூசை மந்திர மொழியாகவே பாவனையில் உள்ளது. எஞ்சிய செம்மொழிகளில் சீனம், தமிழ் இரண்டுமே நிலைத்து நிற்கின்றன.
தமிழ் முழுப்பொலிவுடன் விளங்குவதற்கு காரணம் அதன் தொன்மை, மறு மொழிகளின் உதவியின்றி தனித்து இயங்கக்கூடிய தன்மை, இணையற்ற சொல் வழம், இலக்கியச்செறிவு, மூலப்பொருள், கருப்பொருள் உள்ளடக்கம் முதலியவற்றை குறிப்பிடலாம். இவ்வாறு பல பெருமைகளுக்கு உரித்துடைய ஈழத்தமிழ் இனம் பல சவால்களுக்கு மத்தியில் பயணித்துக்கொண்டிருப்பது நாம் அறிந்ததே. இன ஒடுக்கல், இன அழிப்பு, மதவாதம், பிரதேசவாதம், சர்வதேசியம் இத்தகைய எழுத்தியல்முறைகள் இன்று அரசியலில் சர்வ சாதாரணமாக பயன்படுத்தப்படுவதைக் காண முடிகின்றது.
புத்த மதத்தின் அடிப்படைத் தத்துவங்களான:
Metha – Kindness, அன்பு, தாட்சண்யம்
Karuna – Compassion, இரக்கம், பிறர் துன்பத்தில் பங்குகொள்ளல்
Muditha – Altruism, பொதுநலம் பேணல், பொறாமை ஒழித்தல்
Upekha – Equanimity, tolerance, மன அமைதி கொள்ளல்
இத்தத்துவங்களை சரியாகக் கடைப்பிடிப்பதுமட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் முன் உதாரணமாக விளங்கவேண்டிய சில புத்த துறவிகளே மேற்கூறிய கோட்பாடுகளுக்கு முற்றிலும் மாறாகச் செயல்படுவதை நாம் காண்கின்றோம். இன மத முரண்பாடுகளை தூண்டுவதுமல்லாமல் இலங்கையின் அரசியலைத் தீர்மானிக்கும் ஆயுதமாகவும் இது பாவிக்கப்படுகிறதென்பது வேதனையான விடயமாகும்.
தமிழன் இல்லாத நாடும் இல்லை, தமிழனுக்கு என்றொரு நாடும் இல்லை. இந்த நிலைதான் ஈழத்தமிழ் இனம் எதிர்கொண்ட சவால்களுக்கு மூல காரணமாக அமைந்தது எனக் கூறலாம்.
எனினும் தமிழ் இனம் மீள எழும் தன்மை (resilience) கொண்டவர்களாக இருக்கின்ற காரணத்தால் எண்ணில் அடங்கா இடர்களைக் கடந்தும் மீளவும் எழுந்து நிற்கின்றார்கள் என்பது பெருமைக்குரியது.
நன்றி