HomeTNC Talentsபக்கத்து வீட்...

பக்கத்து வீட்டு அக்கா

-

Article from TNC Kalai Vizha 2024 Magazine.

         2009 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி. வசந்த காலத்தின் அழகையெல்லாம் காட்டிக் கொண்டு சன் ஹோசேயில் அந்த நாள் பிரகாசமாக விடிந்திருந்தது. ஆனால் கண்ணனின் மனதில் மட்டும் ஒருவித சோகம் கவிந்திருந்தது. இலங்கையின் வடக்கில் போர் உக்கிரம் அடைந்திருந்த நேரம் அது. ஒவ்வொரு நாளும் வேலைக்குப் புறப்படுவதற்கு முன்னர் ஏதாவது நல்ல செய்தி வராதா என்ற அற்ப நம்பிக்கையோடு வலைத்தளத்தைத் துருவித் துருவித் தேடியும் ஏமாற்றமும் துயரமும்தான் அவனுக்கு மிஞ்சின. உலக நாடுகளெல்லாம் பார்த்தும் பார்க்காதமாதிரி இருக்க குண்டு வீச்சுக்களினாலும் பீரங்கித் தாக்குதல்களினாலும் தமிழ் மக்களின் உடல்கள் கொடூரமாகச் சிதைக்கப்பட்டுக் கொண்டிருந்தன. அன்றும் அப்படித்தான் ஒரு வீடியோ கிளிப் வந்திருந்தது. அதில் அரசாங்கம் அறிவித்திருந்த ”போரற்ற பிரதேசத்தில்” பல ஆண்கள் பெண்கள் குழந்தைகளின் உடல்கள் சிதறிப்போய் கிடந்தன. போரற்ற பிரதேசம் killing field ஆக மாறியிருந்தது. அதிலே ஒரு  பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டு விழித்த கண்களோடு ஓரமாக வீழ்ந்து கிடந்தது. இப்படியான காட்சிகளையெல்லாம் பார்த்துப் பார்த்து மனம் மரத்துப் போயிருந்தாலும் அந்தக் காட்சி மட்டும் ஏனோ கண்ணனின் மனதில் ஒரு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்தக் கண்கள் அவனையே பார்த்துக் கொண்டிருப்பதுபோல அவனுக்குத் தோன்றியது. அந்த முகம் சற்று முதிர்ச்சி அடைந்து காணப்பட்டாலும் திறந்திருந்த அந்தக் கண்கள் மட்டும் அழகாக இளமையாக அவனுக்கு மிகவும் பரிச்சயமானவையாகத் தோன்றின. அவன் உடல் சற்றே சிலிர்த்தது. அது அவனது பக்கத்து வீட்டு அமுதாக்காவாக இருக்குமோ என்ற எண்ணம் அவனை ஆட்கொண்டது. பின்னர் காரில் வேலைக்குக் புறப்பட்டபோதும், வேலை நேரத்திலும் அமுதாக்காவின் நினைவு கண்ணனின் எண்ணங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது.

ஏறத்தாள 16 வருடங்களுக்கு முன்னர் – தொண்ணூறுகளின் முற்பகுதி. யாழ்ப்பாணத்திலிருக்கும் ஒரு கிராமத்தில் கண்ணனின் வீட்டிற்கு அருகில் அமுதாக்கா பெற்றோர் மற்றும் ஒரு தங்கையோடு வாழ்ந்து வந்தார். அவருக்கு கண்ணனைவிட ஒரு ஆறு வயது அதிகமாக இருந்திருக்கும். அவன் ஆறாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தபோது அமுதாக்கா உயர்தர வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளும் பள்ளி முடிந்த பின்னர் கண்ணன் அவரிடம் டியூஷன் எடுக்க அவரின் வீட்டிற்கு செல்வான். அவர் பொறுமையாக அவனுக்குப் பாடங்கள் சொல்லித் தருவார். அவர் நல்ல அழகாக இருப்பார். படிப்பிலும் நல்ல கெட்டிக்காரி என்று எல்லோரும் சொல்வார்கள். டியூஷன் முடிந்த பின்னரும் கண்ணன் அவரோடு நேரத்தைச் செலவிடுவான். வீட்டில் செய்து வைத்திருக்கும் தின்பண்டங்கள் மற்றும் சாக்லட் போன்றவற்றை அமுதாக்கா அவனுக்குத் தருவார். அவருக்கு அவன் ஒரு உடன்பிறவாச் சகோதரன். தம்பி என்று அவர் அவனை அழைக்கும்போது அதில் ஒரு கனிவு இருக்கும். 

கண்ணனுக்கும் அமுதாக்காமேல் நிறையப் பாசம் இருந்தது. ஒவ்வொரு நாளும் அவரைப் போய் எப்போது பார்க்கலாம் என்று அவன் ஆவலோடு காத்திருப்பான். 

ஒரு கால கட்டத்தில் கண்ணன் பின்னேரங்களில் அமுதாக்கா வீட்டிற்குச் செல்லும்போது அவர் முன் விறாந்தையில் வெளியே பார்த்தபடியே நின்றிருப்பார். முதலில் அவர் தனக்காகத்தான் காத்திருக்கிறார் என்று கண்ணன் நினைப்பான். நாளடைவில் அவர் காத்திருப்பது தனக்காக அல்ல, தெருவழியே அடிக்கடி சயிக்கிளில் செல்கின்ற காந்தனுக்காகத்தான் என்ற விஷயத்தை அவன் உணர்ந்தான். காந்தன் அமுதாக்கா படிக்கின்ற பள்ளியின் அருகில் இருந்த ஆண்கள் பாடசாலையில் படித்துக் கொண்டிருந்தான். பக்கத்துக் கிராமத்தில் வசித்து வந்தான். நல்ல உயரமாக அழகாக இருப்பான். அவன் படிப்பில் அதிகம் கவனம் செலுத்தாமல் ஊரிலுள்ள வடிவான பெண்களின் பின்னால் திரிகின்ற ஒரு விளையாட்டுப் பிள்ளை என்பது பலருக்கும் தெரியும். ஆனால் அமுதாக்காவிற்கு எப்படியோ அவன்மேல் ஒரு ஈர்ப்பு  வந்துவிட்டது. அதைக் கண்டு கண்ணனுக்குச் சற்றுக் கோபங்கூட வந்தது. அமுதாக்காவின் பாசத்தைக் காந்தனோடு பகிர்ந்துகொள்ள அப்போது அவன் தயாராக இருக்கவில்லை.

அமுதாக்கா GCE (A/L) இல் சித்தி அடைந்து பல்கலைக்கழக ஆனுமதிக்குத் தகுதி பெற்றார். அதற்கிடையில் பக்கத்து ஊரிலிருந்த ஒரு தனியார் பாங்கிலும் (bank) அவருக்கு வேலை கிடைத்திருந்தது. அந்த நேரத்தில் இருந்த நாட்டின் நிலைமை கருதி பெற்றோரின் தூண்டுதலில் அவர் பாங்க் வேலையில் சேர்ந்தார். காந்தன் எல்லோரும் எதிர்பார்த்தது போலவே (A/L) பரீட்சையில் சித்தியடையவில்லை. அவன் திரும்பவும் பரீட்சை எழுதாமல் வேலை தேடுவதாகச் சொல்லிக்கொண்டு பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தான். 

 வருடங்கள் சில கழிந்தன. கண்ணன் அப்போது உயர்தரப் பாடசாலையில் படித்துக்கொண்டிருந்ததால் முன்புபோல் அமுதாக்காவின் வீட்டிற்கு ஒவ்வொரு நாளும் போவதில்லை. இடையிடையே போகும்போது, 

 “ஏண்டா நேற்று வரேல்லை?” என்று கரிசனையோடு கேட்பார்.

 “அக்கா எனக்கு நிறைய ஹோம் வேர்க் இருக்கு. அதோடை நீங்களும் வேலையிலையிருந்து லேட்டாத்தானே இப்ப வாறநீங்கள்” என்று ஒரு கிண்டலோடு கண்ணன் சொல்வான். ஏனென்றால் அமுதாக்கா வேலையிலிருந்து திரும்பும்பொது காந்தன் அவரைத் தினமும் சந்தித்துக் கதைப்பதாக அவனது நண்பர்கள் சொல்லியிருந்தார்கள். 

 அது தெரிந்துதானோ என்னவோ அமுதாக்காவின் பெற்றோர் அவருக்கு விரைவாக மாப்பிள்ளை தேடுவதாகச் செய்திகள் வந்தன. காந்தன் அவர்களின் லிஸ்டில் இல்லை.

 ஒரு ஞாயிற்றுக்கிழமை பின்னேரம் அமுதாக்காவின் வீட்டிற்குக் கண்ணன் போயிருந்தபோது அவர் கட்டிலில் படுத்தபடி அழுதுகொண்டிருந்தார். அவனைக் கண்டதும் கண்களைத் துடைத்தபடி எழுந்திருந்தார்.

 “அக்கா ஏன் அழுறீங்கள்?” என்று கேட்டான்.

 “அப்பாவும் அம்மாவும் எனக்கு லண்டனிலையிருந்து லீவிலை வந்திருக்கிற ஒருத்தரைக் கல்யாணம் பேசி வைச்சிருக்கினம். எனக்கு அதிலை விருப்பம் இல்லை. நான் கட்டிறதெண்டால் காந்தனைத்தான் கட்டுவன்” என்றார்.

 “அப்ப அதை அவைக்குச் சொல்ல வேண்டியது தானே” என்றான் கண்ணன்.

 “நான் சொன்னனான். ஆனால் அவைக்கு அவனைப் பிடிக்காது. சும்மா வேலை வெட்டியில்லாமல் திரியிறவனைக் கட்டிப்போட்டு என்ன செய்யப் போறாய் எண்டு எனக்குப் பேச்சு விழுந்தது.”

 அமுதாக்காவின் பெற்றோர் அவரின் காதலைப் பற்றிச் சற்றும் பொருட்படுத்தவில்லை. பல தமிழ்ப் பெற்றோருக்குக் காதல் என்பது கதைகளிலும், படங்களிலும் வருவது, நிஜ வாழ்க்கைக்குப் பொருந்தாது என்ற எண்ணம் உண்டு. 

 “ஆர் அந்த லண்டன் மாப்பிளை?” என்று கண்ணன் கேட்டான்.   

 “அவர் எங்கடை தூரத்துச் சொந்தக்காரர் தான். நல்ல வேலையிலை இருக்கிறாராம். என்னை நல்லா வைச்சுப் பாத்துக்கொள்ளுவாராம். இந்தப் போர்ச் சூழலிலை இருந்து நான் தப்பியிடலாம் எண்டு சொல்லுகினம்.”

 பெற்றோரின் கோணத்தில் இருந்து பார்க்கும்போது அவர்கள் சொல்வதிலும்  சில நியாயங்கள் இருப்பது கண்ணனுக்குப் புரிந்தது. ஆனாலும் காதலுக்கு முன்னால் நியாயங்கள் எடுபடாது.

 “நீங்கள் மனசை மாத்தி அந்த லண்டன் மாப்பிளையைக் கட்டினால் என்ன?” என்று கண்ணன் கேட்டான் தயங்கியபடியே.

 அப்போதுதான் முதல் முறையாக அமுதாக்காவின் கோபத்தை அவன் கண்டான்.

 “நீ சின்னப் பெடியன். எனக்கு அட்வைஸ் பண்ண வந்திட்டியோ? உனக்குக் காதலைப் பற்றி என்ன தெரியும்” என்று கத்தினார்.

 அவர் மனம் மாறுவதற்கு வாய்ப்பில்லை என்பதை அப்போது கண்ணன் உணர்ந்தான்.

 “அப்ப என்ன செய்யப் போறீங்கள்?” என்றான். 

 “அவை இனிமேல் என்னை வேலைக்குப் போக வேண்டாமாம். புதன்கிழமை எனக்குப் பதிவுக் கல்யாணம் செய்துவைக்கப் போகினமாம். ஆனால் எப்பிடியாவது இதிலையிருந்து நான் தப்ப வேணும். நான் ஒரு லெட்டர் தாறன். அதைக் காந்தனிடம் குடுப்பியா?” என்றார். 

அப்போது அவர் குரல் தளதளத்துப் போயிருந்தது. கண்களில் கண்ணீரும் தளும்பிக் கொண்டிருந்தது. அவர் கேட்டதைச் செய்வதற்கு உண்மையில் கண்ணனுக்குத் தயக்கமாக இருந்தது. கடித்தத்தில் என்ன எழுதியிருப்பார் என்பதை அவனால் ஊகிக்கவும் முடிந்தது. ஆனாலும் அமுதாக்காவின் சோகத்தை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கடிதத்தை வாங்கிக் கொண்டான்.

 இரண்டு நாட்களின் பின்னர் அமுதாக்கா காந்தனோடு எங்கோ ஓடிவிட்டார் என்ற செய்தி ஊரில் காட்டுத்தீபோல் பரவியது. அவரின் வீட்டாருக்கு அந்தச் செய்தி பேரிடியாக அமைந்தது. தங்களது மற்ற மகளை இனிமேல் யார் கட்டுவார்கள் என்று அவர்கள் அழுது புலம்பிக் கொண்டிருந்தார்கள். ஊராரோ அமுதாக்காவை ஓடுகாலி என்று கேவலமாகத் திட்டினார்கள். தான் செய்தது சரியா தவறா என்பதைக் கண்ணனால் தீர்மானிக்க முடியவில்லை. அதைப் பற்றி அவன் இதுவரை யாருக்குமே சொன்னதுமில்லை. 

 கொஞ்சக் காலத்தில் அமுதாக்காவும் காந்தனும் வன்னிப்பகுதியில் குடியேறிவிட்டதாக செய்திகள் வந்தன. அதன் பின்னர் அவர்களைக் கண்ணன் சந்திக்கவில்லை. அவர்கள் நன்றாக வாழவேண்டும் என்று நினைத்துக் கொள்வான். சில வருடங்களின் பின்னர் கண்ணனும் ஒருவாறு அமெரிக்கா வந்து சேர்ந்தான். அதன் பின்னர் அவனது பெற்றோரும் கொழும்பிற்கு வந்து அங்கேயே தங்கி விட்டார்கள். அவர்கள் அங்கு வந்தபின்னர் அமுதாக்கா யாரிடமோ போன் நம்பரைப் பெற்று கண்ணனின் தாயாரோடு தொடர்பை  ஏற்படுத்திக் கொண்டார். தாங்கள் கொஞ்சம் கஷ்டப் பட்டாலும் சந்தோசமாக இருப்பதாகச் சொன்னாராம். “தம்பி எப்பிடி இருக்கிறான்?” என்று கண்ணனைப் பற்றி அடிக்கடி விசாரிப்பாராம்.

வேலையிலிருந்து வீடு திரும்பியதும் கண்ணன் கொழும்பிற்கு கோல் (call) எடுத்து அம்மாவோடு கதைத்தான். ஒரு வாரத்திற்கு முன்பு அமுதாக்கா முல்லைத் தீவிலிருந்து கோல் பண்ணியதாக அம்மா சொன்னார். அவர் தனது கணவரோடும் தங்கள் இரு மகன்களோடும் போரற்ற பிரதேசம் என அறிவிக்கப்பட்ட இடத்திற்கு வந்து சேர்ந்திருப்பதாகவும் அங்கு நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும் சொன்னாராம். எப்படியாவது கஷ்டப்பட்டு வெளியே வந்தாலும் தங்களுக்கு உதவி செய்வதற்கு யாரும் இல்லை என்று சொல்லி அழுதாராம். அதற்கு அம்மா அவர்கள் வெளியே வந்தால் தங்களோடு வந்து கொழும்பில் இருக்கலாம் என்று ஆறுதல் சொன்னாராம். அம்மா சொன்ன அந்த விபரம் கண்ணனுக்குச் சற்று மன ஆறுதலைக் கொடுத்தது. தான் பார்த்த வீடியோ கிளிப்பைப் பற்றி அம்மாவுக்கு அவன் சொல்லவில்லை. நடந்ததை ஊர்ஜிதப்படுத்தாமல் அதைப் பற்றிச் சொல்லி அவரை வருந்த வைக்க அவன் விரும்பவில்லை. 

இரண்டு நாட்களின் பின்னர் பலத்த உயிர் இழப்புக்களுக்கு மத்தியில் போர் முடிவடைந்துவிட்டதாகச் செய்திகள் வலைத்தளங்களில் வந்து கொண்டிருந்தன. உயிர் தப்பிய பொதுமக்கள் நந்திக்கடலைக் கடந்துசென்று அரச படைகளிடம் சரணடைவதாகவும் செய்தி வந்தது.

 அன்றிரவு அம்மா கண்ணனைப் போனில் அழைத்தார். 

 “அமுதா பீரங்கித் தாக்குதலிலை செத்துப் போனாளாம்” என்று சொல்லி அழுதார்.

 கண்ணனின் கண்களிலிருந்து கண்ணீர் பீரிட்டு வந்தது.

 “அது உங்களுக்கு எப்பிடித் தெரியும் அம்மா?” என்று கேட்டான். 

 “முள்ளிவாய்க்காலிலை இருந்து தப்பின சிலபேர் எப்பிடியோ படையளட்டைச் சரணடையாமல் கொழும்பு போன்ற இடங்களுக்கு வந்திட்டினம். அப்பிடித் தப்பின எங்கடை குமரன் ரகசியமா வந்து எங்களைச் சந்திச்சவன்.” 

 “அப்ப காந்தனுக்கும் பிள்ளையளுக்கும் என்ன நடந்தது?” என்று அவசரமாகக் கேட்டான் கண்ணன்.

 “அவையள் படையளட்டைச் சரண் அடைஞ்சிட்டினமாம்.” 

 “அவை வெளியிலை வந்தபிறகு எனக்குச் சொல்லுங்கோ. எனக்கு ஒரு முக்கியமான கடமை இருக்கு. நான் அவையைப் போய்ப் பாத்து அவைக்கு என்னாலை முடிஞ்ச ஊதவியைச் செய்யவேணும்” என்றான் கண்ணன்.

 இளவயதில் தமது கிராமத்தில் பின்னிப் பிணைந்திருந்த அவர்களின் வாழ்க்கை இப்படி வெவ்வேறு திசைகளில் போனதை நினைத்துக் கண்ணன் வருந்தினான். அதுவும் அமுதாக்கா தேர்ந்தெடுத்த வாழ்க்கைப் பாதை மிகவும் கரடு முரடானதாக அமைந்துவிட்டது. அமுதாக்காவின் கொடிய மரணத்தால் கண்ணனின் மனத்தில் ஏற்பட்ட காயம் ஆற நீண்ட காலம் எடுக்கும்.   (யாவும் கற்பனையே)

ABOUT THE AUTHOR

Ratnam Sooriyakumaran
Ratnam Sooriyakumaran
  • TNC President 1998
  • Community Contributor

POST YOUR COMMENTS

Recent Articles

Most Popular